மாவீரன் பூலித்தேவன்



முன்னுரை

தமிழ்நாட்டில் வெள்ளையர்களுக்கு எதிராக குரல் கொடுத்த வீரர்களில் ஒருவர், பூலித்தேவன். சுதந்திரப் போராட்ட வீரர்களில் முக்கிய பங்காற்றிய இவரது வாழ்க்கைக் குறிப்புகளைப் பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

பிறப்பும், இளமையும்

பூலித்தேவன், 1.09.1715 - ல் சித்திர புத்திரதேவர், சிவஞான நாச்சியார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் காத்தப்ப பூலித்தேவன் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெற்கட்டும் செவ்வல் பாளையம்.

சிறு வயதிலேயே சிலம்பம், மல்யுத்தம், குதிரையேற்றம், வாள்சண்டை போன்ற வீர விளையாட்டுகளில் தேர்ச்சி பெற்றார், தனது 19-வது வயதில், நெற்கட்டும் செவ்வல் பாளையத்தின் ஆட்சி பொறுப்பேற்றார்.

ஆங்கிலேயரை எதிர்த்தல்

ஆற்காடு நவாபுக்கும், மற்றொரு முகமதிய அரசருக்கும் இடையே ஏற்பட்ட பூசல் காரணமாக இரு பிரிவினரும் தனித் தனியே கப்பம் வசூல் செய்தனர். இந்த குழப்பத்தைப் பயன்படுத்தி பாளையக்காரர்கள் கப்பம் கட்டுவதை மொத்தமாக நிறுத்தினார்கள். இந்த சூல்நிலையில் ஆற்காடு உரிமையை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்தார். அன்று முதல் ஆங்கிலேயர்கள் மன்னர்களோடு நேரடியாக போரிட ஆரம்பித்தனர்.


பூலித்தேவன் கப்பம் கட்ட மறுத்ததால், கர்னல் ஹெரான் தலைமையில் ஒரு படையும், ஆற்காடு நவாப்பின் அண்ணன் மாபூஸ்கான் தலைமையில் நவாபு படைகளும் 1755-ம் ஆண்டு பூலித்தேவனின் கோட்டையை முற்றுகையிட்டனர். ஆங்கிலேயர் வசம் வெடிமருந்துகளும், துப்பாக்கிகளும், பீரங்கிகளும் இருந்தன. அப்படியிருந்தும், பூலித்தேவனின் கோட்டையில் சிறு விரிசலைக் கூட ஏற்படுத்த முடியவில்லை. மாறாக, பூலித்தேவன் ஆங்கிலேயப் படைகளைக் கொன்று குவித்தார்.

ஆங்கிலேயருடன் முதல் போரில் வெற்றி பெற்றாலும், மறுபடியும் அவர்கள் தாக்குவார்கள் என்ற காரணத்தினால், மீண்டும் பாளையக்காரர்களை ஒன்றுபடுத்தி முயற்சி செய்தார். இந்த முயற்சி ஆங்கிலேயர்களுக்குத் தெரிய வந்தது. உடனே அவர்கள் பாளையக்காரர்களோடு தொடர்பு கொண்டு அவர்களுக்கு பதவி ஆசையைக் காட்டி தங்கள் வசப்படுத்தினார்கள். அவர்கள் 'சுதேசப்படை' என்ற புதிய படையை உருவாக்கி, அதை யூசுப்கானிடம் ஒப்படைத்தனர். இவர் பிறப்பால் மருதுநாயகம் என்ற தமிழன்.


1760-ல் யூசுப்கான் நெற்கட்டும் செவ்வல் பகுதிக் கோட்டையைத் தாக்கும்போதும், 1766-ல் கேப்டன் பவுட்சன் வாசுதேவ நல்லூர் கோட்டையைத் தாக்கும்போது எதிர்த்து நின்று வெற்றி பெற்றார் பூலித்தேவன். இவர் 1755-ம் ஆண்டு முதல் 1767 வரை பல போர்களை சந்தித்தார். பூலித்தேவன் சிறிய பகுதிக்குத் தலைவராக இருந்தாலும், ஆங்கிலேயர்களையும், கூலிப்படைகளையும் எதிர்த்து 12 ஆண்டுகள் போர் புரிந்தார்.

தப்பிச் சென்றார்

1767-ம் ஆண்டு கான்சாகிப்புடன் நடைபெற்ற இறுதிப் போரில் பூலித்தேவனின் படைகள் யூசுப்கான் படைகளிடம் தோற்றன. இங்கிலாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட பீரங்கிகளின் உதவியோடு பூலித்தேவனின் கோட்டையில் முதன்முதலாக உடைப்பு ஏற்படுத்தப்பட்டது. ஆங்கிலேயப் படை கோட்டைக்குள் புகுந்தது. வேறு வழியின்றி எஞ்சிய படைகளோடு பூலித்தேவன் கடலாடிக்கு தந்திரமாகத் தப்பிச்சென்றார். இறுதியில் 1767-ம் ஆண்டு ஆங்கிலேயார்கள் அவரை கைது செய்தனர்.

இறுதிக் காலம்

பூலித்தேவனின் இறுதிக் கால வரலாறு பற்றி இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஆங்கிலேயர் அவரை ஆரணிக் கோட்டையின் தலைவன் அனந்த நாராயணின் மாளிகைக்கு ரகசியமாக வரவழைத்து கைது செய்தனர். அப்போது பாளையங்கோட்டைக்கு செல்லும் வழியில் சங்கரன் கோவிலில் சென்று இறைவனை வழிபட விரும்பினர் பூலித்தேவன் என்றும், அங்கு அவர் ஜோதி மயமானதாகவும், ஒரு சிலர் கூறுகின்றனர். வேறு சிலர், ஆங்கிலேயர் அவரைப் பிடித்ததும், மக்கள் கிளிர்ச்சி அடையக்கூடும் என்று நினைத்து அவரை மறைமுகமாக தூக்கிலிட்டதாகவும் கூறுகின்றனர்.



Comments

Popular posts from this blog

காடுகள் பாதுகாப்பு

சுனாமி