முதறிஞர் ராஜாஜி



முன்னுரை

தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்தவர். கலப்புத் திருமணத்தை ஆதரித்தவர், இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல், இப்படி பல்வேறு சாதனைகளைப் படைத்து அனைவராலும் தென்னாட்டு காந்தி, அரசியல் ஞானி, மூதறிஞர் என்று போற்றப்படுபவர் ராஜாஜி.

பிறப்பும், இளமையும்

இவர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொரப்பள்ளி என்னும் ஊரில், 10.12.1878-ம் சக்கரவர்த்தி அய்யங்கார், சுந்தரம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் ராஜகோபாலச்சாரியார். இளம் வயதிலேயே கல்வியில் நாட்டம் மிக்கவர். இவர் இந்துக் கல்லூரியில் பி.. பட்டம் பெற்றார். இவர் தம் 16-வது வயதில் அலமேலு மங்கையை திருமணம் செய்து கொண்டார்.

சமுதாயப் புரட்சி

ராஜாஜி, இந்து சமயத்தின் மீது பற்றுள்ளவர். தீண்டாமை மற்றும் மூடப்பழக்கத்தை எதிர்த்தவர். இந்த விஷயத்தில் காந்தியடிகளை தனது குருவாக ஏற்றுக் கொண்டார். சேலம் மாநகராட்சிப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநகராட்சி, பல துறைகளிலும் வளர்ச்சியடைந்தது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில், தாழ்த்தப்பட்டவர்கள் கல்லூரியில் சேர உதவினார். மேட்டூரில் இருந்து சேலத்திற்கு நீர் கொண்டு வரும் திட்டத்தை நிறைவேற்றினார். தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனது இல்லத்தில் சமபந்தி விருந்து வைத்து சமுதாயத்தில் புரட்சியை ஏற்படுத்தினார். இதனால் அவருக்கு எதிர்ப்பு வலுத்தது. அவர் தந்தை இறந்தபோது கூட யாரும் வரவில்லை. எல்லாவற்றையும் துணிவுடன் சமாளித்தார் ராஜாஜி.

உறுதியான கொள்கை

ராஜாஜி தனது கொள்கையில் உறுதியுடன் இருந்தார். கலப்பு திருமணத்தை ஆதரித்து தானே முன் நின்று நடத்தி வைத்தார். தனது மகள் லட்சுமியை மகாத்மா காந்தியின் மகன் தேவதாஸ் காந்திக்கு கலப்பு திருமணம் செய்து வைத்தார். 'சுதந்திரம் எனது பிறப்புரிமை' என்று கர்ஜித்த திலகரின் கொள்கையை ஆதரித்தார். அது போல் அன்னிபெசன்ட் அம்மையாரின் ஹோம்ரூல் இயக்கத்தையும் ஆதரித்தார். அவர் சிறையில் இருக்கும் போது அவரது விடுதலைக்காகப் போராடினார். 1919-ல் இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையையும், 1920-ல் தன்னாட்சி இயக்கத்தின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்.


1920-ல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் ராஜாஜி தனது பேச்சாற்றல் மூலம் அந்த இயக்கத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றினார். 1930-ல் உப்பு சத்தியாக் கிரகத்திற்காக, காந்திஜி தண்டிக்குச் சென்றார். அதே நேரம், இவர் தமிழகத்தில் வேதாரண்யத்திற்கு உப்பு சத்தியாக்கிரக யாத்திரையை மேற்கொண்டார். இதனால் அவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை கிடைத்தது.

1946-ல் அமைக்கப்பட்ட இந்திய இடைக்கால அரசில் அமைச்சர் பதவியை ஏற்றார். 1947-ல் மேற்கு வங்காள கவர்னராகவும். 1948-ல் இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் ஆகவும், 1952-ல் தமிழகத்தின் முதல் அமைச்சராகவும் பதவியேற்றார்.

அரசியல் ஞானி என்று போற்றப்பட்ட இவர், ஒரு சிறந்த இலக்கியவாதி. 'திக்கற்ற பார்வதி' என்ற இவரது கதை திரைப்படமாக உருவாக்கப்பட்டது. 'சக்கரவர்த்தி திருமகன்', 'வியாசர் விருந்து' போன்ற நூல்களை எழுதிய இவர், 25.12.1972-ம் தேதியன்று காலமானார்.


Comments

Popular posts from this blog

காடுகள் பாதுகாப்பு

மாவீரன் பூலித்தேவன்

சுனாமி